Saturday 20 August 2011


மரணம் நிச்சயம்!


வாழ்வின் சுவர்களில்
கொட்டை எழுத்தில்
எழுதப்படுகிறது மரணம்
படிக்க மட்டுமே நாளாகிறது!
எத்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப்பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது -
தனக்கான மரணம்!
யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டா செல்கிறது மரணம்?
விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்
பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை -
நிறைய பேரின் வாழ்க்கை!
என்ன தான் மனிதன்
செய்தாலும் - மனிதனை
செத்து தொலை என்று
சொல்ல விடுவதேயில்லை மரணம்
மீறி சிலர் சொல்கிறார்கள்
ஏன் கொலை கூட செய்கிறார்கள்
மனிதரற்றோர்
மரணம் அவர்களை
மன்னிப்பதேயில்லை, மாறாக
தினம் தினம் கொள்கிறது,
கடைசி ஓர்நாளில்
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப்படும் நாளில்
அவர்களை இறந்ததாக -
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!
பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பெண்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்
ஆனால் -
நெருங்கும் முன்
நன்றாகப் பார்த்துக் கொள்கிறது!

No comments:

Post a Comment